Monday 11 May 2015

நா.முத்துக்குமார் கவிதைகள்
























***பட்டாம்பூச்சி விற்பவன்***

பதின்மீன்று வயதிருக்கும்
பாலத்தின் அருகே
பார்த்தேன் அவனை.
நேற்று பூக்கடை,
போனவாரம் பஜார்வீதி,
என்
இடம் மாறுதலே குறிக்கோளாய்
இருக்கிறது அவன் வாழ்வு.
குடையை மல்லாத்தி
அதில் பரப்பியிருந்தான் சரக்கை.
எடுப்பவர் கையில்
வண்ணம் தொலைக்காமலும்
சிறகின் இயல்பை
மறந்தன பட்டாம்பூச்சிகள்
அடிவயிற்றில் மெழுகுபூசி.
கூவி
விற்றும் விடுகிறான்
அவ்வப்போது ஒன்றிரண்டை.
சின்னவயதில்
பிடிக்குத் தப்பியதை
இப்போது பிடித்ததாய்
எல்லோருக்கும் கர்வம்.
அலமாரியோ, சுவரோ
இனி
ஆவலோடு வந்து
ஏமாறப் போகின்றன‌
வீட்டு பல்லிகள்.
~~~~~~~~~~~~~~~~~~
நா.முத்துக்குமார்



காதலித்து கெட்டு போ.
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி..

~ முனைவர் டாக்டர் நா.முத்துக்குமார்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நா.முத்துக்குமார் "" துளிப்பாக்கள் ""


உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்.


-------------------------------

குழந்தைகள்
கை காட்டாத
கூட்ஸ் ரயிலில் இருந்து
கொடியசைத்துப் போகிறான்
கடைசிப் பெட்டியில் கார்டு.

-------------------------------

சிறகுகள் உதிர்த்து
வெளிவரும் பறவை
கூண்டிற்கு விடுதலை.


--------------------------------

பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.


பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணடிகள்.




வாழ்க்கை

கடவுளுடன் சீட்டாடுவது

கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்

..

ஸ்தல புராணம்


பெருமாள் கோயில் பிராகாரமும்

பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!

தன் தம்பியுடன் வந்து

நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!

..

மரணம் பற்றிய வதந்தி

திருஷ்டி கழிந்தது என்றார்கள்

தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்

எப்போதோ எழுதிய

என் கவிதையைச் சொன்னேன்..
"இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!

..

உயில்


மகன் பிறந்த பிறகுதான்

அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!

..

குட்டி புத்தரின் கோபம்


"" இவர் பேரு புத்தர்

இன்னொரு பேரு ஆதவன்
அந்தப் பேரைத்தான்
உனக்கு வைத்திருக்கிறேன்!''
என்றேன் மகனிடம்.

கோபமாக சொன்னான்;

""அவர் பேரு புத்தர்
நான்தான் ஆதவன்!'

..

நெஞ்சொடு கிளத்தல்

சுடலையேகி வேகும் வரை

சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்!

..

உள்ளும் புறமும்


அப்பாவின் சாயலில் உள்ள

பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன!


..
நில் கவனி செல்


மாநகரத்துச் சாலைகளுக்கு

அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி!


..
முதல் காதல்

காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
..



இட்லிப்புத்திரர்கள்



இட்லிகள் மென்மையானவை.

வெதுவெதுப்பானவை.
சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.
திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.
மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி
கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு
மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.

- நா. முத்துக்குமார்

(தொகுப்பு – பட்டாம்பூச்சி விற்பவன்)

..

கூர்வாள்

நான் ஏன் நல்லவனில்லை

என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று

நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு

அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று

உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்

- நா.முத்துக்குமார்

அமரர் சுஜாதா நேரடியாக பாராட்டிய முத்துக்குமாரின் கவிதை ஒன்று...

தூர்
—-

வேப்பம்பூ மிதக்கும்

எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்

அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி

கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென

அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்

தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா

கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க


..........................................................
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்:

”கருப்பு வெள்ளைப் புகைப்படம்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்” 3



மணல் திருட்டு:


”பறவைகள் முகம்பார்க்க
கண்ணாடியின்றி திரும்பின
வறண்டு போன நதி” 4



”ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க” 5


பெண்சிசு கொலை:



”வயற்காட்டு எலியே
உனக்கும் பெண் சிசுவா?
பின் ஏன் நெல்” 6





பிளாஸ்டிக் பை:



”கடற்கரையில் ஊற்று தோண்டியதும்
கையில் கிடைத்தது
பிளாஸ்டிக் பை” 7 


வறுமைநிலை:


“எத்தனையோ வீட்டுக்கு படியளந்தவர்
இன்றைக்கும் வறுமையில்
கட்டிட மேஸ்திரி” 8 


”எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை” 9



”இன்று வேண்டாம்
நாளை வா நிலா
ஊட்டுவதற்குச் சோறில்லை” 10 

.

சுதந்திரம்:



”புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்” 11

22 comments:

  1. awesome i want more na.muthukumar kavithai(poet)

    ReplyDelete
  2. ஒவ்வொரு கவிதைகளும், புதையல் நிரப்பப்பட்ட பெட்டிகள்.....
    அள்ளிக்கொண்டே இருக்கிறேன் அதட்டுவதற்கு தான் ஆளை காணோம்.
    Miss u நா.முத்துக்குமார்

    ReplyDelete
    Replies
    1. யாரு சாமி நீங்க

      Delete
    2. நல்ல ஆழமான கருத்து நண்பரே

      Delete
  3. எனக்குப் பிடித்த நீ என்னவாகப் போகிறாய் கவிதைய கானாம்

    ReplyDelete
  4. வரிகளால் வலியை கொடுத்தவர்

    ReplyDelete
  5. என் மனதைகொன்ற உனக்கு தண்டனை கொடுக்க தேடினேன் உன் ஒவ்வொரு கவியிலும்....

    ReplyDelete
  6. கவனமாயிருக்கிறேன்
    நான் களவாடிய உன் இதயத்தை
    களவு கொடுக்காமலிருக்க

    ReplyDelete
  7. கடைசிவரை அப்பாவும்
    மறந்தே போனார்
    மனசுக்குள் தூரெடுக்க

    ReplyDelete
  8. Un ezhuthukkalin edaiveliyil satru edaiveli vittu erukiren

    ReplyDelete
    Replies
    1. கவிப் பிரியர்,
      ஆம் அணுவளவு இடைவெளி வேண்டும்
      இல்யேல் உங்கள் எடையைக்கூட
      காண இயலாது

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. மேலும் தேடுகிறேன் இக்கவிஞனின் கவிதையை ஆனால் கிடைக்கவில்லை இன்னும் கவிதையையும் கவிஞனையும்...😔😔😔

    ReplyDelete
  11. Kattraiye kadithu thinpavan Ooi kavithaiyai kadithu thinnamala poiveduvan varthaigalilum vasam kandavan nee poovena vandugal mooikkirathu kavithaiel

    ReplyDelete
  12. காலங்கள் ஓடினாலும்
    கண்கள் தேடுவது உங்கள் கவிதைகளையே.
    காற்றில் கரைந்தாலும்
    தமிழ் உள்ளவரை
    உங்கள் கவிதைகள்
    வாழும்
    எங்கள் நெஞ்சினிலே

    ReplyDelete
  13. உன் கவிதைகளில் உள்ள தேனை ருசிக்க பட்டாம்பூச்சியாய் பரிதவிக்கின்றது ‌‌வாசகர்களின் உள்ளம்

    ReplyDelete
  14. கவிதைகள் மீது காதலை ஏற்படுத்தியது இவரின் எழுத்துகள். மறைந்த பின்னும் வாழும் கலைஞன்

    ReplyDelete
  15. உங்கள் கவி கேட்ட பின்னே நானும்
    கவி வடிக்க எண்ணுகிறேன்...
    எழுத பேனை முனை உன்றிய பின்
    தளர்ந்தே போகிறேன் உம் போல் வரைய முடியததை எண்ணி....
    என் காகிதங்களும் காத்திருக்கினறன... உம் கவி போல் என் வரிகளில் நடையிட...

    ReplyDelete
  16. நீ இல்லை என தெரிந்ததும் உம்போல் கவிஎழுதும் கவிஞரை தேடினேன்,
    தேடியும் கிடைக்காத உன்னைப்போல் எவரும் கிடைக்கவில்லை
    ஆயிரம் வரிகளில் உன் வரிகள் மட்டும் ஏன் கோடிட்டு
    காட்டுகிறது என் கண்கள்

    ReplyDelete