Saturday 24 November 2018

அறிவும‌தி– கவிதைகள்- நட்புக்காலம்





இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!
-அறிவுமதி (சிறைச்சாலைக்காக)

 

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.

-அறிவுமதி

 

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
-அறிவுமதி

நீரோட்ட‌ம்!

—-அறிவும‌தி—-

கர்நாடகாவிலும்
இந்து!

தமிழ் நாட்டிலும்
இந்து!

இந்துக்கு இந்து
குடிநீர் த‌ர‌மாட்டாயா

இதுதானா இந்துத்துவா
உங்க‌ள்
தேசிய‌
நீரோட்ட‌ம்!

செம்மொழி‍ – காரணப் பெயர்

—-அறிவும‌தி—-

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

பிழைக்கும் வழி

—–அறிவும‌தி—–

மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!

நட்புக்காலம்

புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

***

வெறுமையான நாட்குறிப்புகள் –

குறிப்பதற்கு ஏதுமற்ற நாள்.

குறிப்பதற்கு உன்னை சந்திக்கவில்லை.

அதனால், நாட்குறிப்பும் வெறும் தாளாயிற்று.

நீயன்றி வேறோர் உலகம் என்று ஒன்றிருந்தால், நாட்குறிப்பிற்கு எத்தனை எத்தனையோ செய்திகள் கிடைத்திருக்கும்.

நீயும் நின் நட்பும் மட்டுமே என் உலகம் என்று ஆகிப் போன பின், உன் சந்திப்பைத் தவிர வேறென்ன நிகழ்வு குறிக்கத் தக்கதான செய்திகளாகி விடும் எனக்கு?

அதனால் அந்தப் பக்கங்கள் வெறும் பக்கங்களாகி விட்டன.

உதடு விரிந்து நீ புன்னகைக்கும் பொழுது, வெளிப்படுமே உன் பல்வரிசையின் வெண்மை – அந்த வெண்மையைப் போல் களங்கமின்றி, பளிச்சென இருக்கும் அந்த வெற்றுக் காகிதங்கள் – ஒரு வேளை உன் புன்னகைகள் தானோ?

***

கடைசி மழைத்துளி – ஹைகூ கவிதை

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ… நான்

***

ஆயுளின் அந்தி வரை

நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்

வானவில் கொடுத்து
மழை தூவிவிட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்

கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்

பூத்த நெருப்பு

பூத்த நெருப்பு

அறிவுமதி

*
என்
மரணம்
அது
கண்ணீரை யாசிக்கும்
பிச்சைப்
பாத்திரமன்று

கவிதைக்குள்
முகம் புதைத்து
யாரங்கே
கதறியழுவது
என்
மரணம்
இரங்கற்பா
எழுதுவதற்கானதும்
அன்று

சவுக்கு மரத்து
ஊசி இலைகளில்
சறுக்கி விழுகிற
பனித் துளிகளாய்
நீங்கள் சிந்தும்
கண்ணீர்ச் சொற்களால்
என் பெயரை உச்சரிக்காதீர்கள்

பூமி
இது தண்ணீரின் கல்லறை
கடல்
அது
பூமியின் சமாதி
என் வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசுவதால்
கவிதையை
நீங்கள்
கெளரவப்படுத்தலாம்
வாழ்க்கையை
கெளரவிக்க
இந்த
வண்ணங்கள்
என்ன செய்யும்

மின்னல்
இருளின் விரோதியன்று
அது
மழையின் விளம்பரம்

கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே
காதலிக்கத் தெரிந்த
உங்களின்
கவிதைகள் கூட
காதல் தோல்விகளின்
கண்ணீர்
விளம்பரங்கள்தாமே

காதலையே
வெற்றிகொள்ள முடியாத
கோழைகளே
கவிஞர்கள் என்றால்
ஓ…
கவிஞர்களே
இந்த
வீரமரணத்தை
நீங்கள்
ஈரப்படுத்தாதீர்கள்
தூரப் போங்கள்
போய் விடுங்கள்

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

நேற்றுவரை
உங்களோடு
மலை முகடுகளில்
விவாதித்துச்
சேரி வீதிகளில்
வில்லுப் பாட்டிசைத்த
வீரக்
கவிமகன்தான்…இதோ
சாம்பற்
பொட்டலமாய்
உங்களைச்
சந்திக்க
வந்திருக்கிறேன்

தோழர்களே
என்
மரணம்
நிஜமானது
மாரடைப்புத்தான்
பொய்யானது

ஆம்
மரணம் எனக்கு
ஊட்டப்பட்டது

வேர்களைப் பற்றிய
விபரங்கள் புரியாமல்
விழுதுகள்
வெட்டப்படுகின்றன

கசக்கிப்
பிழிந்து
ருசித்துச்
சுவைத்த பின்
தூக்கி எறியப்படுகிற
மாங்கொட்டைகள்
மரங்களாய்
விஸ்வரூபமெடுக்கும்
என்பதை
இவர்கள்
மறந்து போயிருக்கிறார்கள்

கோழிக்
குஞ்சுகளைக்
காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளைக்
கலைக்கத் துடிப்பது
குற்றமா என்ன

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

ஒரே
ஒரு நிமிட
மெளன அஞ்சலியும்
வேண்டாம்

புறப்படுங்கள்
தொடரட்டும் நமது
மக்கள்பணி